top of page

சங்கிலித் தொடர்

  • Writer: krithika madasamy
    krithika madasamy
  • Dec 10, 2019
  • 2 min read

நான்கு பசு மாடுகள் சாலையை கடப்பதற்காக, நகரின் பிரதான சாலையில், ஒரு 40-50 வாகனங்கள் காத்திருந்தன. மாடு அக்சலேட்டரை மிதித்து வேகமாக செல்ல முடியாதென தெரிந்தாலும், ஹாரனை விடாது அமுக்கியபடி ஒரு கூட்டம் நின்றுகொண்டிருந்தது. ஒரு மாடுக்கும் இன்னொரு மாடுக்கும் இடையில் உள்ள இடைவேளையில் ஒரு மாடு சர்ரென்று வண்டியை பாய்ச்சியது. மாடுகள் சற்று மிரண்டாலும், மெதுவாகவே சாலையை கடந்தன. வேளச்சேரி -தரமணி பிரதான சாலையின் நடுவிலேயே ஒரு மாடு அமர்ந்திருக்கும். சாலைக்கு இரு பக்கங்களும், நிமிடத்திற்கு நூற்றுக் கணக்கான வாகனங்கள் பறக்கும் நிலையிலும், அது கொஞ்சம் கூட பயப்படாமல் அசை போட்ட படி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்.

தனக்கு சொந்தமான நிலத்தில் ஒரு ஜமீன்தார் உட்கார்ந்திருப்பது போன்ற தோரணை அதனிடம் இருக்கும். வேளச்சேரி என்பது ஒரு 30 ஆண்டுகள் முன்பு வரை நல்ல கிராமம். இன்று மால், மேம்பாலம் என வந்தாலும் அது அந்த மாடுக்கு கிராமம் தான். காட்டின் வழித்தடங்களை யானை அதன் குட்டிகளுக்கு சொல்லிக் கொடுப்பது இல்லை என படித்த மாதிரி ஞாபகம். தலைமுறை தலைமுறையாக தன் மூதாதையர்கள் நடந்த வழித்தடங்களை, தானாகவே கண்டறியும் மரபு ரீதியான அறிவு யானைகளுக்கு இயற்கையாகவே உண்டு. அப்படி தனது பூட்டனார் உட்கார்ந்து, அசைபோட்ட இடத்தை கண்டறிந்து, இந்தப் பசு வந்த இந்த இடத்தில் அமர்ந்திருக்குமோ? நாம் தான் அதன் வைக்கோல் போரை எடுத்துவிட்டு, அங்கு ஒரு டிவைடரை கட்டி வைத்திருக்கிறோம். இது கொஞ்சம் அதீதமான கற்பனையாக தெரிந்தாலும், இது ஒரு சமன்படுத்தும் முயற்சி தான். நகரம் என்றால் சுத்தமான சாலைகளும், வானைத் தொடும் கட்டிடங்களும் தான் என்ற பிம்பம் நம் எல்லோரது மனதிலும் உண்டு. கொஞ்சம் ஆடுகளும், மாடுகளும், கூரைக்கடைகளும் இருந்தால் அது நகரத்தின் அழகை சீர்குலைக்கும் என்கிறார்கள். ஒரு 10 நாட்கள் வெளிநாட்டிற்கு சென்று வந்திருந்தால், இந்த எண்ணம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இது ஒன்றும் அவ்வளவு ஆபத்தான மனநிலை இல்லையே என்று தோன்றுகிறதா?

இதை வேறொரு இடத்தில் பொருத்தி காட்டுகிறேன். காமன்வெல்த் போட்டிகள் டெல்லியில் நடக்கும் நேரத்தில், ஊரில் இருக்கும் குடிசைகள் பிச்சைக்காரர்களையெல்லாம் நகரத்தை விட்டு வெளியேற்றினர். கூவம் நதியை அழகுபடுத்துறோம், கூவம் நதியில் மீண்டும் படகு சவாரி செய்யலாம் என்றெல்லாம் சொல்லி, கூவ நதிக்கரைகளில் வாழ்ந்த மக்களையும், குடிசைகளையும் காலிசெய்து, வேறு எங்கோ குடியமர்த்தினர். சாலைக்கு நடுவில் அமர்ந்திருந்த மாட்டின் ஞாபகம் வருகிறதா? பூர்விகமாக வாழ்ந்த இடத்தை விட்டு அவர்களை துரத்த நமக்கு தேவையான ஒரே காரணம். அழகாக இல்லை என்பது மட்டுமே. இன்றும் நகரம் என்றவுடன் உங்களுக்கு டைடல் பார்க் மட்டும் நினைவில் வரும். பாரீஸ் கார்னரோ, ஜார்ஜ் டவுனோ வராது. நகரத்தை காங்கீரீட் மனிதர்களிடம் ஒப்படைக்காமல், நகரம் என்பது எல்லாருக்குமானது, எல்லா உயிர்களுக்குமானது என்ற சிந்தனையை வளர்த்துக் கொண்டால் மாடோ, ஆடோ, தள்ளுவண்டியை தள்ளும் ஒரு தாத்தாவோ, அவர்கள் சாலையை கடக்கும் வரை, கை ஹாரன் பக்கம் செல்லாமல் இருக்கும்!

ஒரு நாள் சிக்னலில் நின்று, மனம் என்னவெல்லாம் பார்க்கிறது, அதை தொடர்ந்து என்னவெல்லாம் யோசிக்கிறது என்று கவனிக்க கூட நேரம் இல்லை என்றால் நாம் வாழ்ந்து என்ன பயன்? சிந்தனை உண்மையிலேயே ஒன்றொடு ஒன்று இணைக்கபட்ட சங்கிலிக் கனுக்கள் போல தான். ஆங்கிலத்தில் chain of thoughts என்பார்கள். ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மனம் தாவி தாவி செல்லும். சில சமயம் ரயில் போல நீளமாக இருந்தாலும், இலக்கை சென்றடைந்து விடும்.

 
 
 

Comments


Drop Me a Line, Let Me Know What You Think

Thanks for submitting!

© 2020 by Krithika Writes

bottom of page