ஏன் துறுத்திக்கொண்டு நிற்கிறாய்?
- krithika madasamy
- Dec 16, 2019
- 2 min read
கீழ்வருவது ஒரு ஆங்கில தொலைக்காட்சித் தொடரில் வந்த வசனம். ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சியை விமர்சித்து பேசப்படும் வசனம் இது. அதை இன்று இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளோடு பொறுத்தி பார்க்க முடிகிறது!
நான் என் அடையாளத்தை காட்டிக்கொள்வதை ஆபத்தான விஷயமாக நினைக்கிறார்கள் சிலர். ஏன் துறுத்திக் கொண்டு நிற்கிறாய், கூட்டத்தோடு கலந்துவிடு அதிகாரத்தை எதிர்த்து பேசாதே என்கிறார்கள்! எனது பாரம்பரியத்தை, நம்பிக்கைகளை, பழக்கவழக்கங்களை, வரலாற்றை ஏற்றுக் கொள்வதில் அவர்களுக்கு என்ன பிரச்சனை? நான் ஏன் கூட்டத்தோடு ஒன்றிணைய வேண்டும் அதில் என்ன நியாயம் இருக்கிறது ? வெறும் இழப்பு தானே!
ஃபாதீமா லத்தீஃப் ஐஐடி -யில் படிக்க வரும்போது அவர் தாயார் அவர் மதம் சார்ந்த அடையாளங்களை மறைத்துவிடும் படி அறிவுறுத்தினாராம். ஹிஜாப் அணியாமல் எல்லாரையும் போல உடைகள் அணிந்துகொள் என்று கூறினாராம். இயற்கையாக படித்த, வளர்ந்த ஒரு சமூகம், தன் மதத்தில் இருக்கும் பிற்போக்கான விஷயங்களை களைய வேண்டும். அதை தானாகவே முன்வந்து ஒருவர் செய்ய வேண்டும். ஆனால் என் மத அடையாளத்தால், என் உயிருக்கு ஆபத்து வரும் என்று பயந்து ஒருவர் அதை செய்வது இந்த சமூகம் மீது அவருக்கு ஏற்பட்டிருக்கும் அவநம்பிக்கை தான். ஜனநாயக நாட்டில் எல்லாருக்கும் அவர்களது மதத்தை பின்பற்ற உரிமை உண்டு.
அப்படி இருக்கையில் ஒரு இனத்தினர் மீதோ, மதத்தினர் மீதோ தேவையில்லாத வெறுப்புணர்வை உண்டாக்குவது தான் சர்வாதிகாரத்தின் முதல் படி. இதை இன்று உணர்ந்திருப்பார்கள் எல்லாரும். இந்தியா என்றைக்கும் இந்துஸ்தானாக இருந்ததில்லை. இருக்கப் போவதும் இல்லை. இந்தியா எல்லாருக்குமானது. இந்து மதமே சில நூற்றாண்டுகளுக்கு முன் இதே வடிவத்தில் இருந்ததா என்று யோசித்து பார்க்க வேண்டும். அப்படி இல்லாத போது இந்தியாவை இந்து ராஜ்ஜியமாக முன்நிறுத்துவதை வரலாறும் மன்னிக்காது, வருங்காலமும் மன்னிக்காது.
எப்போதும், எந்த சூழ்நிலையிலும், எந்த ஒரு சட்டம் இயற்றும் போதும் நாம் சிறும்பாண்மையினரின் உணர்வுகளை மதிக்கிறோமா என்பதை கவனிக்க வேண்டும். அந்த சட்டம் அவர்கள் உணர்வுகளை காயப் படுத்தினால் அதை உரையாடலின், சட்டத்தின் வழி மாற்றியமைக்க வேண்டும். சட்டமோ, தேர்ந்தெடுத்த சட்டமன்ற உறுப்பினர்களோ செவி சாய்க்க மாட்டார்கள் என்ற நிலையில் தான் அவர்கள் வீதியில் இறங்கி போராடுகிறார்கள். போராட்டத்தை நிறுத்த அரசு இயந்திரம் வன்முறையில் இறங்கினால், மாணவர்கள் நிச்சயம் வெகுண்டு எழுவார்கள். நாடு முழுவதும் நிகழும் மாணவர் எழுச்சிகளை அடக்கிட எந்த அரசாலும் முடியாது அது அரசு, சட்டம் மற்றும் இறையாண்மை மீது பெரிய அவநம்பிக்கையை மட்டுமே விதைக்கும். இந்த பத்தியை எவ்வளவு கணிவாக எழுத முடியுமோ அவ்வளவு கணிவாக, கவனமாக எழுதிருக்கிறேன்.
மதங்களை வைத்து செய்யப்படும் அரசியலுக்கும் வேறு எந்த மாநிலம் வளைந்து கொடுத்தாலும், தமிழகம் கொடுத்துவிடாது என உறுதியாக நம்புகிறேன். இங்கே இருக்கும் அரசியல் கலாச்சாரம் ஒரு போதும் வெறுப்பை விதைக்காது. சஷ்டி விரதமும் இருப்போம், ஐய்யனாருக்கும் கிடாயும் வெட்டுவோம். இவை இரண்டுமே எங்களுக்கு இந்து மதம் தான். மதம் தான் எங்கள் வாழ்க்கைமுறைக்கு வளைந்து கொடுக்க வேண்டுமே தவிர, ஒரு போதும் மனிதன் மதத்திற்கு ஏற்ப வாழ்க்கை நடத்த முடியாது. எதோ ஒரு கட்டத்தில், அந்த மதம் என் மனிதத்தை கேள்விக்குறியாக்கினால், அன்று மதத்தை சிந்திக்காமல் கைகழுவிவிட்டு, மனித்தத்தின் பக்கம் தான் நிற்போம்.
பெரும்பாண்மையினராக இந்த நாட்டில் வாழ்வது நமக்கு கிடைத்திருக்கும் சலுகை ( privilege) . நல்ல வேளை தப்பித்தோம் என்று ஒதுங்கிடாமல், இந்தியாவின் சிறும்பாண்மையினருக்காக, இறையாண்மைக்காக குரல் எழுப்ப வேண்டும். இது உதவியல்ல. கடமை!
கட்டுரைக்கு தொடர்பில்லாத பின்குறிப்பு :
ஒரு மாதத்திற்கு தொடர்ந்து தினமும் ஒரு பதிவு எழுதிவிட்டேன். எல்லாமும் சிறப்பானதாக இருந்ததா தெரியவில்லை. ஆனால் இதுவே எனக்கு ஒரு முன்னேற்றம் தான். மாதத்திற்கு ஒரு கட்டுரை தான் எழுத முடியும். அதற்கு மேல் தோன்றவில்லை என நினைப்பேன். ஒரு நெருக்கடிக்குள் என்னை நானே உள்ளாக்கிய போது தான் புரிந்தது, இது அவ்வளவு சிரமம் இல்லை என்று. தலைப்புகளுக்கா பஞ்சம்? எழுதி தள்ளுவோம்!







Comments