ஆராயிரம் தொப்பிகள்
- krithika madasamy
- Nov 29, 2019
- 2 min read
உலகத்தின் எல்லா பிரச்சனைகளுக்கும், அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளை, அனுதினமும் வாரி இறைத்து கொண்டே இருக்கிறது. ஆனால் இந்த திட்டம் ஜெயிக்கும், இந்த தொழில் செய்தால் வெற்றி நிச்சயம் என மட்டும் எந்த ஒரு அறிவியல் கொண்டும் துல்லியமாக கண்டுபிடித்துவிட முடியாது. பரம்பரை பரம்பரையாக தொழில் செய்தால் கூட, ஒரு ஊரின் எல்லைக்கோடுகளைத் தாண்டினாலே அந்த திட்டத்தின் வெற்றிக்கு எந்த உறுதியும் கிடையாது.
இதற்கு நிர்வாகம் சார்ந்த வல்லுநர் ஒருவர் சொல்லும் யுக்தி தான் இந்த ஆறு தொப்பிகள். 6 விதமான கோணங்கள் அல்லது தொப்பிகளை அணிந்து ஒரு திட்டத்தை சோதிக்க வேண்டும். இந்த திட்டத்தில் என்னவெல்லாம் சரியாக நடக்கும், எதுவெல்லாம் தவறாகப் போகும், அது உங்களுக்கு தரும் அகமகிழ்வு என்ன, உணர்வு என்ன, பொருளாதாரம் என்ன, சந்தை நிலவரம் சார்ந்த தரவுகள் உங்களுக்கு சாதகமாக உள்ளனவா உட்பட எல்லா கோணத்திலிருந்தும் ஆராய்ந்தால் தான் அந்த திட்டத்தை வெற்றியை நோக்கி நகர்த்த முடியும் என்கிறார்.
நிறைய பேரை பார்த்திருக்கிறேன். ஒரு யோசனை உதித்தவுடன் இது தான் உலகத்தின் சிறந்த திட்டம் என்று நினைத்துக்கொள்வார்கள். ஒரு குதிரைக்கு கடிவாளம் கட்டியது போல, நிறைவேற சாத்தியங்கள் குறைவான ஒரு திட்டத்தை தூக்கி சுமப்பார்கள். இதற்கு காரணம் என்னவென்றால், இந்த இண்டெர்நெட் சமூகத்திற்கு முன். தொழில் முனைவோர் குறித்து இருக்கும் சில பிம்பங்கள் தான். முதல் பிம்பம் – உங்கள் கனவை பார்த்து உலகம் சிரித்தாலும் பரவாயில்லை, நீங்கள் அதற்காக உழைத்துக்கொண்டே இருங்கள். இதுப் போன்ற பொய்யான படிப்பினையை எங்குமே கேட்டது இல்லை. யாரோ மூன்றாவது நபர்கள் சிரிப்பதை கண்டுக்கொள்ளத் தேவையில்லை. ஆனால் உங்கள் சுற்றத்தில் யாருக்காவது உங்கள் திட்டத்தில் சந்தேகங்கள் இருந்தால், அதை களைய வேண்டியது தான் ஒரு நல்ல தலைவரின் பண்பு. அவர்களிடமும் வாட்ஸாப் ஸ்டேடஸில் வீர வசனம் பேசுவது முட்டாள்த்தனம். 99 சகிவிகிதம் முடிந்த திட்டத்தில் குறைகள் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டாலும் அதை உணர்ந்து திருத்திக்கொள்வது தான் நல்லது. திட்டத்திலியே திருத்தம் செய்தால் பேப்பரோடு போகும், இறங்கி விட்டால் பணமாக போகும். இரண்டாவது பிம்பம் – (9-5) வேலை கழுத்தை நெறிக்கும், தொழில் வாழ்க்கையில் விளக்கேற்றும். சந்தோஷமாக குடும்பத்தை நடத்தும் எத்தனையோ பேர் வேலைக்கு செல்பவர்கள் தான். பெரும்பாலும் உங்களில் பலர் படித்து வந்ததும் அதே வேலையில் ஈட்டிய பணத்தில் தான். தொழில் முனைவோர்களை, தேவைக்கு அதிகமாகவே, முன் மாதிரிகளாக சமூக வலைதளம் நிறுத்துவதே இதற்கு காரணம்.
எந்த தொழில் முனைவோரும் ஒரு நாளில் வளர்ந்து வருவது இல்லை. ஒரு படி மேலே, இரண்டு படிக் கீழே என்பது தான் தொழிலின் உண்மை நிலவரம். வீம்புக்காக, வேலைக்குப்போக சோம்பேறித்தனப்பட்டு தொழில் செய்தால் வெங்கலக் கிண்ணம் கூட மிஞ்சாது. இதையும் தாண்டி, சமூக ஊடகங்கள் முன் வைக்கும் தொழில் சார்ந்த பிம்பங்களை மனதில் ஏற்றிக்கொண்டு, கண்மூடித்தனமாக தொழில் செய்ய இறங்குபவர்களை ஆராயிரம் தொப்பிகள் கொண்டும் காப்பாற்ற முடியாது.







Comments